மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் டி.கல்லேரி கிராமம் உள்ளது. இங்கே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் (வயது 56) என்ற ஆசிரியரும் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து நாள்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி மாணவிகளை அடித்துள்ளார். இவரது பாலியல் தொல்லைக்கு 24 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது
ஆசிரியர் லட்சுமணனின் பாலியல் தொல்லை தாங்க முடியாத மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மீனாசாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினார்.
இதையறிந்த ஆசிரியர் லட்சுமணனை தலைமறைவானார்.
இந்த நிலையில் இன்று லட்சுமணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட லட்சுமணனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.