மகன் கண்ணெதிரே பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலி
மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற ஆசிரியை தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
ஆசிரியை
திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஷகிலா நிறைமதி (வயது 59). இவர் திருவள்ளூர் அடுத்த ராமதண்டலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது கணவர் பொன்ராஜ் என்பவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது தன் மகன் நவீன் (29) உடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஷகிலா நிறைமதி தன் மகன் நவீன் உடன் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் வெங்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சாவு
அவர்கள் வெங்கத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது. அப்போது பின்னால் இருந்த ஷகிலா நிறைமதி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தார். உடனே மகன் மற்றும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஷகிலா நிறைமதி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.