ஆசிரியையை கத்தியால் வெட்டி 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சிறுகனூர் அருகே ஆசிரியையை கத்தியால் வெட்டி 3 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுகனூர் அருகே ஆசிரியையை கத்தியால் வெட்டி 3 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியை
சிறுகனூரை அடுத்த கொணலை அருகே உள்ள கல்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி (வயது 43).இவர் கொள்ளிடம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
தினமும் இவர் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருவார். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். புறத்தாக்குடி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ஆசிரியை விமலா ராணியிடம் வழி கேட்பது போல் வண்டியை நிறுத்தி பேச்சுக் கொடுத்துள்ளனர்.
கத்தியால் வெட்டி...
அப்போது ஒரு நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில், அந்த நபருடன் போராடியதில் மற்றொருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலாராணியின் கையில் வெட்டிவிட்டு சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த விமலாராணியை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விமலா ராணியின் கணவர் ஆனந்தராஜ் நேற்று சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை கத்தியால் வெட்டிவிட்டு 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.