அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை -தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை -தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

சென்னை,

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கண்டனம்

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2013-14-ம் ஆண்டுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.

புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கல்வித்தரத்தை உயர்த்த முடியும். தமிழ்நாட்டில் 3800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாகக்கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச்சூழலை சீரழிக்கும்.

தேர்வு அறிவிக்கை

சுவர் இல்லாமல் சித்திரம் வரையமுடியாது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை மேம்படுத்த முடியாது. இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story