ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சிறப்பு வகுப்பு நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே காலை நடைபெறும் சிறப்பு வகுப்பை ரத்து செய்ய வேண்டும், வாரத்தேர்வை அந்தந்த ஆசிரியர்களின் தயாரிப்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவலுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி ஏற்பை உறுதி செய்த பின்னரே பணி விடுவிப்பு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கூட்டமைப்பு அமைப்பாளர் பென்னட் ஜோஸ் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர்கள் அய்யப்பன்பிள்ளை, ராஜசேகர், நாகராஜன், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவமதிக்கும் செயல்
போராட்டம் குறித்து அமைப்பாளர் பென்னட் ஜோசிடம் கேட்டபோது, "நாங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து பேசுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு இன்று (அதாவது நேற்று) மாலை 5.30 மணிக்கு வரும்படி கூறினார். ஆனால் நாங்கள் வந்தபோது முதன்மை கல்வி அதிகாரி இல்லை. இது ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாக கருதி அனைத்து ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்" என்றார்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.