மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா
தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பாளராக பணியாற்றுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வரும் வகையில் அவர்கள் இருப்பிடத்திலிருந்து அருகாமையிலேயே உள்ள தேர்வு மையங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் குலுக்கல் முறையில் தான் ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணியில் மாவட்ட கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார்.
உள்ளிருப்பு போராட்டம்
இதனால் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து 20 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால் காலையில் அவர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே வழக்கமாக நடைமுறையில் உள்ளதை மாற்றாமல் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் முன்பாக தரையில் அமர்ந்து குலுக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.