முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம்
விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:
தமிழகத்தில் பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணி பல்வேறு மையங்களில் நடைபெற்று வருகிறது. தர்மபுரி விஜய் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று வாயில் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் பாரி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட தலைவர் அருண்குமார், மாநில பிரசார செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியம், நிர்வாகிகள் தங்கவேல், செல்வம், காவிரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசாணை எண் 101- ஐ ரத்துசெய்ய வேண்டும். 2009-ம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 2004- ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.