ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் அரவிந்த் பேச்சு
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி கற்பிக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி முகாமில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி கற்பிக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி முகாமில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
பயிற்சி முகாம்
குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி முகாம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாணவருக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கும் கல்வியே அடிப்படையாகும். பள்ளிக்கல்வியில் கணிதப் பாடமென்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மாணவர்களும் கணிதம் நன்கு புரிந்து கற்றாலே மற்ற பாடங்களையும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் போது மிகவும் கடினமானது கிடையாது என்பதை ஆசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டும். கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே உள்ள திறமைகளை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவ-மாணவிகளின் நிறைகள் மற்றும் குறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பித்தால் நன்றாக படிப்பார்கள் என்பது குறித்து அனுபவமிக்க ஆசிரியர்களிடம் தெரிந்து கொண்டு அதன் வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.
அர்ப்பணிப்புடன்...
ஆசிரியர்கள் கற்பிக்கும் கல்வியினை மாணவர்கள் புரிந்து கொண்டாலே அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதோடு, உயர்கல்வி பயில்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் ஒழுக்கமாக, நற்பண்புகளை வளர்த்து கொள்வதற்கான முழு பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கையினை ஒவ்வொரு ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்கால சமுதாய மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது ஆகும். எனவே அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ- மாணவிகளுக்கு அர்ப்பணிப்புடன் சிறந்த முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஜீனா ஜேம்ஸ், விரிவுரையாளர் விஜிலா, வட்டார கல்வி அலுவலர் அமுதா பாய், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபிலா பேகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் டி.ஜே.பிந்து, ஆசிரியர் பயிற்றுனர்கள் முருகேசன், ரவிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் ஜெயன் செய்து இருந்தார்.