நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி ஹென்றி ஜெரோம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் அகமது நவவி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ- மாணவிகளுக்கு மருத்துவம், உள்ளிட்ட உயர்கல்வி படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகை ரூ.1000 வழங்கப்படுவது போல் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிற காலை சிற்றுண்டி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் படிக்கும்போது மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவிபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ரசூல் மைதீன், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு தலைவர் அமலராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி டோமானிக் ராஜ், முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜான் கென்னடி, பால் கதிரவன், கிப்ட்சன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.