திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்பு பேட்ஜ்
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நிறைவுபெற்று, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 2 மையங்களில் 10-ம் வகுப்பு விடைத்தாளும், 2 மையங்களில் 12-ம் வகுப்பு விடைத்தாளும் திருத்தப்படுகிறது. இந்த பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையமான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று காலை ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அவர்களில் பல ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.
10 அம்ச கோரிக்கைகள்
இதையடுத்து மையத்தின் முன்பு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீஸ்குமார், மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்றார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சுவக்கின் அமல்ராஜ், பொருளாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணி நிரவலில் மாறுதலாகி சென்ற ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 1.1.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷமிட்டனர்.