ஆசிரியர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
பெண் குழந்தைகளின் கல்வி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொது மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
பெண் குழந்தைகளின் கல்வி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொது மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் ஒரு சிறப்பானது. அதை போல் பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி இன்றியமையாதது.
பெண் குழந்தைகள் என்று பாராமல் அவர்களை ஊக்குப்படுத்தினால் சமுதாயத்தின் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பெண் குழந்தைகளின் கல்வி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எந்தவொரு திட்டத்திலும் மக்களிடத்தில் முன்னிறுத்த வேண்டும் என்றால் விழிப்புணர்வு தேவை. அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பொது மக்களிடையே திட்டம் எளிதில் சென்றடையும்.
இந்த திட்டமானது பெண் குழந்தைகளை பாதுகாப்பது, பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிக்கும் ஒரு முன்னோடி திட்டமாகும். பெண் கல்வி முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்டம் நிர்வாகம் பெண் கல்விக்காக என்றும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் "கலெக்டரும் களம் காணும் வீராங்கனைகளும்" என்ற தலைப்பில் கலெக்டர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பள்ளி மாணவிகளின் நாடகம், யோகா பயிற்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பெண்ணுக்கு ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்த ஊமை நாடகம் மாணவிகளால் நடத்தப்பட்டது. இதனை அனைவரும் வரவேற்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களின் திறனை பாராட்டும் வகையில் 300 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மரக்கன்றுகள், சாவிக்கொத்துக்கள், பதக்கங்களை வழங்கியும், 77 வீராங்கனைகளுக்கு விளையாட்டு காலணிகளை வழங்கியும் கலெக்டர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.