பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஆசிரியர்கள் சமத்துவ உணர்வை ஊட்ட வேண்டும்


பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஆசிரியர்கள் சமத்துவ உணர்வை ஊட்ட வேண்டும்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஆசிரியர்கள் சமத்துவ உணர்வை ஊட்ட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ ஆசிரியர்களுக்கான நிகரி விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு துரை.ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். ரவிகார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். ராமமூர்த்தி தொகுப்புரை வழங்கினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரி, ராணிப்பேட்டை ஆட்டுப்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் தமிழரசி சற்குணம், சென்னகுணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அருணகிரி, சென்னை சர்.தியாகராயா கலைக்கல்லூரி பேராசிரியை செங்கொடி, திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ, விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் ஆகியோருக்கு சமத்துவ ஆசிரியர்களுக்கான விருதையும், முன்னூர் கிளை நூலகர் ராஜேஷ் தீனாவுக்கு எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமத்துவ உணர்வு

முன்பெல்லாம் அடித்தட்டு மக்கள் பள்ளிக்குச்செல்லவும், கோவில்களுக்குள் நுழையவும் முடியாது என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி அனைவரும் கல்வி கற்க முடியும், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது திராவிட ஆட்சியில்தான். தமிழகத்தில் ஒருசில பள்ளிகளில் இன்றும் சாதிய பாகுபாடு காணப்படுகிறது. அதையும் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள்ளேயே தலித் மக்கள் சென்று தரிசனம் செய்ய இயலாத நிலை இருந்தது. ஆனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி சட்டம் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அதுபோல் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் பகுதிகளிலுள்ள கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள நிதி வழங்கியவர் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்பிருந்த நிலை இப்போது இல்லை. இதை நாம் உணர வேண்டும். இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்.

இளமையிலே குழந்தைகளுக்கு சமூக, சமுதாய, சகோதரத்துவ உணர்வை ஆசிரியர்கள் ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். நாம் தமிழர்கள், மனிதர்கள் என்ற உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சமத்துவ உணர்வை ஊட்ட வேண்டும். திராவிட ஆட்சி, 50 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இன்று அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே திராவிட ஆட்சியின் சாதனைதான். நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் தமிழ், இனம், மொழி உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சந்தோஷ் கொளஞ்சி நன்றி கூறினார்.


Next Story