சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை என புகார்


சேலத்தில்  பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்  விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை என புகார்
x

சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் சேலம், நெய்க்காரப்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் என 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், சேலம் ராஜாஜி சாலையில் உள்ள சாரதா பாலமந்திர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று காலையில் வந்தனர்.

பின்னர் அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆசிரியர்கள் கூறியதாவது:-

வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்தாண்டு வழக்கமான முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வேறு வழியின்றி பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை நாங்கள் புறக்கணிப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

2 மணி நேரம் பாதிப்பு

ஆசிரியர்களின் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியத்திற்கு பின்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலத்தை தொடர்ந்து ஆத்தூர், நெய்க்காரப்பட்டி, தாரமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story