டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் கருத்து


டாக்டர்கள், வக்கீல்கள் போல்  கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி  ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் கருத்து
x

டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் கருத்து

சேலம்

சேலம்,

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களை பெற்று நடைமுறையில் இருக்கிறது.

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது. தங்கள் நிறுவன பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கருப்பு நிறத்திலும் கோட் அணிவதும் அதற்காகத்தான். சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக்கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். 2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்து வர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித்துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக்கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

புதிய முயற்சியாக இருக்கும்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் பி.திருநாவுக்கரசு கூறும் போது, 'கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சில ஆசிரியர்களின் உடைகள் சரியில்லாமல்தான் இருக்கிறது. அனைவரையும் சொல்லவில்லை. உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ள மேல் அங்கி அணிவது என்பது சற்று அதிகம் தான். ஆசிரியர்களை பார்த்தால் ஒரு மரியாதை வரவேண்டும். அதற்கேற்றாற்போல் கண்ணியமான உடை அணிவது அவசியமான ஒன்று. நான் பணிபுரியும் கல்லூரியில் சீருடை இருக்கிறது. எனவே எங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை. இதை எங்கள் கல்லூரி பாரம்பரியாக செய்து வருகிறது. அனைவரையும் இதேபோல் பின்பற்ற சொல்லவில்லை.

அதேநேரத்தில் சரியான உடையை அணிந்தால் நல்லது. ஆசிரியரை பார்த்து, மாணவர்களும் அதேபோல் வரவேண்டும். அதற்கேற்றபடி ஆசிரியர்கள் உடை அணிவது சரியாக இருக்கும்' என்றார்.

சிறப்பாக இருக்கும்

சேலம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரிகணிதத்துறை பேராசிரியை பொற்கொடி கூறும் போது, 'கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் உடல் அமைப்பை மறைப்பதற்காக 'மேல் அங்கி" அணிய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வகுப்பறை என்பது மாணவர்களுக்கு கல்வியையும், நல்ல ஒழுக்கங்களையும் கற்று கொடுக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது. எனவே பேராசிரியர்கள் ஆடை அணியும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எவரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்காத வகையில் ஆடை அணிய வேண்டும். கல்வித்துறை அறிவித்தப்படி ஆடை கட்டுபாட்டை அனைத்து கல்லூரிகளிலும் பின்பற்றினால் சிறப்பாகவும், வரவேற்கத்தக்க கூடியதாகவும் இருக்கும்' என்றார்.

சேலம் அரசு கலைக்கல்லூரி கூட்டுறவுத்துறை உதவி பேராசிரியர் பிச்சமுத்து கூறும் போது,'கல்லூரி பேராசிரியர்கள் மேல் அங்கி அணிய வேண்டும் என்ற உத்தரவை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களை பார்த்தால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட வேண்டும். எனவே மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள் முன் உதாரணமாக எடுத்து கொண்டு ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்றி உடைகள் அணிய வேண்டும். இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இது சவுகரியமாக இருக்கும். எனவே அரசு அறிவித்த ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து அதை கடைபிடிக்க வேண்டும்'என்றார்.

வரவேற்கத்தக்கது

தாரமங்கலம் ஸ்ரீ ஜெயஜோதி கல்வியியல் கல்லூரி முதல்வர் கண்ணன் கூறும் போது,'பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் விதவிதமாக உடையணிந்து வருவதால் அவர்களின் மனதில் பொருளாதாரம் தொடர்பான உளவியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. அதை களைவதற்கு இந்த சீருடை கட்டுப்பாடு என்பது நல்லதே. பேராசிரியர்கள் சீருடை அணியாமல் தங்கள் விருப்பமான பேண்ட்-சட்டை அணிந்து கல்லூரிக்கு வருகிற போது பேராசிரியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் போகக்கூடும். இதையெல்லாம் களைந்திடும் வகையில் அரசு அறிவித்துள்ள இந்த பேராசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு என்பது வரவேற்கத்தக்கது. மேலும் மேல் அங்கியின் நிறம் மற்றும் வடிவம் தொடர்பான ஒரு மாதிரி புகைப்படத்தை அரசாங்கமே வெளியிட்டால் அதை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களும் பின்பற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு மேல் அங்கி வடிவத்தை பின்பற்றி அது ஒரு புதிய வகை வேறுபாட்டை உருவாக்கக்கூடும்' என்றார்.

உயர வழிவகுக்கும்

எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயசித்ரா கூறும் போது,'தமிழக அரசு அறிவித்துள்ள பேராசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை முழுமனதாக வரவேற்கிறேன். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் மேலும் உயர வழிவகுக்கும். அத்துடன் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கும் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கும் தங்கள் பொறுப்பும், கடமை உணர்வும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். பல்வேறு நிலைகளில் பேராசிரியர்களுக்கு சாதகமான பலன்களையே வழங்கக்கூடிய இந்த அரசின் ஆடை கட்டுப்பாடு என்பது, குறிப்பாக என் போன்ற பெண்Teachers, Student, Parent Feedback பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் ஒரு கவுரவ கவசமாகவே கருதுகிறோம்.

ஒரு புதிய முயற்சி

சேலம் ஆண்டிபட்டியை சேர்ந்த கலா கூறும் போது,' பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு இருப்பது போன்று கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகளுக்கும் உடையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் நல்லது தான். இது ஆசிரியர்களுக்கு நன்மையாக தான் இருக்கும். குறிப்பாக பேராசிரியைகளுக்கு மேல் அங்கி அணிய சொல்வது அவர்களுக்கு சவுகரியத்தை கொடுக்கும். இதன் மூலம் கற்பித்தல் பணியை அவர்கள் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது ஒரு புதிய முயற்சியாக இருக்கும்' என்றார்.


Next Story