போதை பொருள் விற்பனை குறித்து ஆசிரியர்கள்-மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்- சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு தலைவர் ராஜா தகவல்


போதை பொருள் விற்பனை குறித்து ஆசிரியர்கள்-மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்- சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு தலைவர் ராஜா தகவல்
x

போதை பொருள் விற்பனை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம் என சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு தலைவர் ராஜா கூறினார்.

நாகப்பட்டினம்

சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகைமாலி, பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோரை கொண்ட குழுவினர் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேளாங்கண்ணியில் கடலோர பேரிடர் அபாயக்குறைப்பு திட்டத்தின் கீழ் ரூ.62.14 கோடி மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட கம்பி மூலம் மின் இணைப்பு வழங்கும் பணியை பார்வையிட்டனர்.அதைத்தொடர்ந்து திருமருகல் அருகே சீயாத்தைமங்கை பகுதியில் தமிழகத்தில் முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் கியாஸ் பிளான்டை பார்வையிட்டனர். பின்னர் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சட்டப்பேரவை பொது நிறுவனக்குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேசியதாவது:-

702 பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு

போதைபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 702 பள்ளிகளில் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் போதை பொருள் விற்பனை குறித்து போலீஸ் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்போர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். ஆசிரியர்களும் கல்வி நிலையங்கள் அருகே போதைபொருள் விற்பனை செய்வதை கண்டால் தயக்கம் இன்றி போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் நிர்மலாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கியது.


Next Story