ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா


ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
x

எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,

எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த எடையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பிளஸ்- 2 மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்தநிலையில் பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டது என கல்வி அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

ஆசிரியர் பணியிடங்கள்

இந்நிலையில் எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்பு மாணவர்களுக்கு காமர்ஸ் பிரிவில் கணக்கியல், வணிகவியல், பொருளியல், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதைப்போல தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கும் அறிவியல் பிரிவில் விலங்கியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.இதில் பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்புகளில் மட்டும் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. சில பாடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர். எனவே கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளிகள் திறப்பதற்கு முன் காலியாக உள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story