சேலத்தில் பரபரப்பு: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு
சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி போஸ்டர்கள்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியும், பல மாவட்டங்களில் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களை ஒட்டியும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக...
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சிலர் நேற்று சேலத்தில் சூரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே, ஒற்றை தலைமை ஏற்று அ.தி.மு.க.வை வழிநடத்த வாருங்கள் என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
இதனிடையே, சேலம் சூரமங்கலம் சுப்பிரமணியநகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போஸ்டர் கிழித்த விவகாரம் தொடர்பாக போலீசில் யாரும் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.