தென்னையில் ஊடுபயிராக தேக்கு சாகுபடி


தென்னையில் ஊடுபயிராக தேக்கு சாகுபடி
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக தேக்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீண்ட காலப்பயிர்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால் சமீப காலங்களாக தென்னை விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது. அதேநேரத்தில் நீண்ட காலப் பயிரான தென்னையை கைவிட்டு மாற்றுப் பயிருக்கும் செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் காய்கறிகள், கீரைகள், பூக்கள், மல்பெரி என பலவகையான பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்து வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளனர். மேலும் பாக்கு, வாழை, மிளகு போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் ஒருசில விவசாயிகள் அவ்வப்போது வருவாய் ஈட்டுவதற்குப் பதிலாக மொத்தமாக வருவாய் ஈட்டும் வகையில் தேக்கு மரங்களை தென்னை மரங்களுக்கு இடையிலும் வேலி ஓரங்களில் நடவு செய்து வளர்த்து வருகின்றனர்.

நிரந்தர வருமானம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தென்னை விவசாயத்தில் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை சரிவு விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பாக உள்ளது.இதனால் தென்னையில் ஊடுபயிராக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை நட்டு வளர்த்தோம். ஆனால் காய்கறிகளுக்கும் போதிய விலை கிடைக்காத நிலை விவசாயிகளின் நிலையை மிகவும் மோசமாக்கி விடுகிறது. இத்தகைய சூழலில் தேக்கு மரம் வளர்ப்பு என்பது நிரந்தர வைப்புத் தொகை போல நீண்ட காலம் கழித்து நிச்சய வருமானம் தரக்கூடியதாக உள்ளது.தேக்கு மரம் சுமார் 10 முதல் 20 ஆண்டுகளில் நிரந்தர வருமானம் தரக்கூடியதாகும்.எனவே தென்னையில் ஊடுபயிராக தேக்கு சாகுபடி செய்துள்ளோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story