20 பவுன் நகைகளை விற்று ஆன்லைனில் சூதாடிய இளம்பெண் தற்கொலை


20 பவுன் நகைகளை விற்று ஆன்லைனில் சூதாடிய இளம்பெண் தற்கொலை
x

20 பவுன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பல லட்ச ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த இளம்பெண், வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி புதுநகரில் வசித்து வருபவர் பாக்யராஜ். இவருடைய மனைவி பவானி (வயது 29). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கந்தன்சாவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பவானி, கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவருடைய கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் பலமுறை பவானியை கண்டித்தனர். ஆனாலும் அவர், ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்து வந்தார்.

20 பவுன் நகை

ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பவானி, பணம் கட்டி விளையாடுவதை பழக்கமாக்கி கொண்டார். அதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. இதையறிந்த அவரது கணவர், மனைவியை எச்சரித்தார். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையாக அடிமையான பவானியால் அதில் இருந்து மீள முடியவில்லை.

பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது 20 பவுன் நகையை விற்று, அதில் கிடைத்த பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்தார். நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்தது. அவை அனைத்தையும் சிறிது சிறிதாக ஆன்லைன் சூதாட்டத்தில் பவானி இழந்தார்.

மேலும் தனது 2 சகோதரிகளிடமும் தலா ரூ.1½ லட்சம் வீதம் ரூ.3 லட்சத்தை வாங்கி, அதனையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்தார். இவ்வாறு நகையை விற்றது, சகோதரிகளிடம் வாங்கியது என பல லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் பவானி இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

சோகமாக இருந்தார்

இதனால் மனம் உடைந்த பவானி, இதுபற்றி தனது சகோதரிகளிடம் கூறி வருத்தப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சகோதரிகள், இனியாவது ஆன்லைனில் சூதாடுவதை நிறுத்திவிடு என அறிவுரை வழங்கினர். எனினும் சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்துவிட்டதால் பவானி சோகமாகவே இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த கணவர் பாக்யராஜ், மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்த பவானி, பின்னர் குளித்துவிட்டு வருவதாக குளியல் அறைக்கு சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பாக்யராஜ், குளியல் அறை கதவை தட்டினார். பவானியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது, குளியல் அறையில் பவானி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பவானியின் உடலை பார்த்து அவரது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் குடும்ப தலைவியாக, 2 குழந்தைகளின் தாயாக இருந்த இளம்பெண் ஒருவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story