குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 30), லாரி டிரைவர். அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருடைய மகள் சசிகலா (29). அருண்குமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மன வேதனை அடைந்த சசிகலா தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது தாய் மாரியம்மாளிடம் அவ்வப்போது கூறி வந்துள்ளார். அதற்கு அவரது தாயார் அவரை சமாதானம் செய்து வந்துள்ளார். மேலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி தற்கொலை முடிவை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று தாயார் வீட்டிற்கு செல்போனில் தொடர்பு கொண்ட சசிகலா தனது குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் சசிகலாவின் வீட்டிற்கு விரைந்து ெசன்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சசிகலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.