ராணுவ வீரர் அவமானப்படுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தன்னை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரர் முதல் மனைவியை தனது வீட்டு முன் அழைத்து வந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதால் அவமானம் அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
தன்னை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரர் முதல் மனைவியை தனது வீட்டு முன் அழைத்து வந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதால் அவமானம் அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரபாகரன் (வயது 28). ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி பூர்ணிமா.
மனைவி இருக்கும் நிலையில் பிரபாகரன் அதனை மறைத்து அதே பகுதியை சேர்ந்த சரிகா (வயது 18) என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து சரிகாவின் தந்தை பழனி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்ததாக பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வந்தார்
அதன்பின் சரிகாவை அவரது தந்தை, வீட்டிற்கு அழைத்து சென்றார். ஜாமீனில் வெளிவந்த பிரபாகரன் மீண்டும் தன் காதலி சரிகாவின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அப்பொழுது தான் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவி இருப்பதும் அதனை மறைத்து தன்னை திருமணம் செய்ததும் சரிகாவுக்கு தெரியவந்தது. இது குறித்து பிரபாகரனிடம் சரிகா கேட்டபோது உனக்கு விருப்பம் இருந்தால் சேர்ந்து வாழலாம் என கூறினார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரிகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கேக்வெட்டினார்
கடந்த 29-ந் தேதி பிரபாகரன் தன்னுடைய முதல் மனைவி பூர்ணிமாவை சரிகா வீட்டிற்கு முன் அழைத்து சென்று அங்கு பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார்.
வெறுப்படைந்த சரிகா மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரிகா தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த தந்தை பழனி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைகரசி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சரிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்
மேலும் விசாரணையில் இறந்து போன சரிகா தன்னுடைய தந்தை பழனிக்கு 12 பக்கத்திற்கு உருக்கமான கடிதம் எழுதியிருந்தார். அதனை தலையணையில் வைத்திருப்பதாக லெட்டர் இன் பில்லோ என ஆங்கிலத்தில் பேனாவால் கையில் எழுதியிருந்தார்.
இதனையடுத்து கடிதத்தை பார்த்தபோது அதில்,'' என்னை மன்னித்து விடுங்கள். அம்மாவை செல்லமாக பார்த்து கொள்ளுங்கள். அம்மாவை அடிக்காதே. எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை'' என சரிகா கூறியிருந்தார்.
ஏமாற்றி காதல் திருமணம் செய்து போக்சோவில் கைதான ராணுவ வீரர் ஜாமீனில் முதல் மனைவியுடன் வந்து வீட்டு முன் வந்து பிறந்தநாள் கொண்டாடியதால் அவமானம் அடைந்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.