குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை


குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
x

கோத்தகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்ப தகராறு

கோத்தகிரி அருகே தவிட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி (28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மற்றும் 1½ வயதில் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார், ஆனந்திக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் சதீஷ்குமார் பணிக்கு சென்று விட்டார். அவர் பணி முடிந்து இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர் கதவை தட்டி நீண்ட நேரமாகியும், உள்புறம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார், பின்புற வழியாக சென்று வீட்டிற்குள் பார்த்த போது ஆனந்தி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

அங்கு 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சதீஷ்குமார் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெண்ணின் தாய் ராணி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று குன்னூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) துரைசாமி கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். சதீஷ்குமார் மற்றும் இருவரின் பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். விசாரணையின் போது கோத்தகிரி தாசில்தார் (பொறுப்பு) மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் தீபக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Next Story