கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தற்கொலை
காதலித்து கலப்பு திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகாசி,
காதலித்து கலப்பு திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவருடைய மகள் மாலதி (வயது 24). இவரும் சிவகாசி கங்காகுளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய மகன் ஜெயமுருகனும் (27) காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு வரும் என்று நினைத்த மாலதி, கடந்த 8 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, ஜெயமுருகனை திருமணம் செய்துகொண்டார்.
ஜெயமுருகன் வீட்டாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இதற்கிடையில் மாலதி கர்ப்பம் ஆனதை தொடர்ந்து தனது தாய் மாடத்திக்கு தகவல் தெரிவித்து, அவருடன் போனில் மட்டும் பேசி வந்துள்ளார்.
தம்பதி தற்கொலை
ஜெயமுருகன், மாலதி ஆகிய இருவரும் வீட்டின் 2-வது மாடியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமுருகனின் அண்ணன் தங்கம் உள்ளிட்டவர்கள் வந்து 2 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாலதியின் தாய் மாடத்திக்கு, தங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
6 மாத கர்ப்பம்
அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்களை பார்த்து மாடத்தி கதறி அழுதார். தன்னுடைய மகள், மருமகன் இறப்பின் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், என்னுடைய மகளுக்கு காதல் கலப்பு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. மகள் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.