தி.மு.க. பிரமுகர் ஜாமீன் மனு தள்ளுபடி


தி.மு.க. பிரமுகர் ஜாமீன் மனு தள்ளுபடி
x

இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு: தி.மு.க. பிரமுகர் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை கடந்த ஆண்டு ஒரு கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஹரிஹரன், தி.மு.க. பிரமுகர் ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கைதானவர்களில் ஜூனத் அகமது மீது பதிவான குண்டர் சட்டப்பிரிவை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே ரத்து செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் கேட்டு ஜூனத் அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை, கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதனால் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் மீதான வழக்கின் விசாரணை பாதிக்கும். அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டின் தீவிர தன்மை கருதி, அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.


Next Story