சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை- கணவரிடம் போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அருகே, இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே, இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொத்தனார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 32). கொத்தனார். இவர் பொள்ளாச்சியில் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பா குவளைக்கண்ணி அருகே உள்ள மில்லில் வேலைபார்த்து வந்தார்.
குத்திக்கொலை
ராஜேந்திரன் பொள்ளாச்சியில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து விட்டு செல்வார். அவருக்கு புஷ்பா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவி மீது ராஜேந்திரனுக்கு ஆத்திரம் இருந்தது. இந்த நிலையில் ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு புஷ்பா மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது அங்கு வந்த ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி புஷ்பாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் புஷ்பாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து காயம் அடைந்த புஷ்பாவை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
கணவரிடம் விசாரணை
இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை கணவனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.