கணவருடன் இளம்பெண் தற்கொலை


கணவருடன் இளம்பெண் தற்கொலை
x

நெருங்கி பழகிய வாலிபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில் கணவருடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

நெருங்கி பழகிய வாலிபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில் கணவருடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குடும்ப தகராறு

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு முள்ளங்குழி விளையைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (வயது 40). பிளம்பர். இவருடைய மனைவி சந்தியா (34). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில் ஜான் ஐசக் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கும் சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சினையும் தலை தூக்கியுள்ளது. சண்டை போடுவதும், சகஜ நிலைக்கு திரும்புவதும் என அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்றுள்ளது.

சந்தியா மீது வாலிபர் குற்றச்சாட்டு

சந்தியாவின் தாயார் காந்தி சூரியகோடு அருகே கோட்டூர்ேகாணம் கீழவிளையில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு மணவாளக்குறிச்சி தட்டான்விளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாயுடன், சந்தியாவின் தாயார் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது உங்கள் மகள் சந்தியா, எனக்கு ரூ.30 லட்சம் தர வேண்டும், ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுக்கிறார் என்று குற்றம்சாட்டினார். நீ எதற்கு, என் மகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர் கூறிய பதிலை கேட்டு காந்தி அதிர்ச்சி அடைந்தார். அதாவது, உங்கள் மகள் சந்தியா என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிதான் என்னிடம் நெருங்கி பழகி ரூ.30 லட்சத்தை வாங்கினார் என்று கூறியுள்ளார். ஆனால் காந்தி இதனை நம்பவில்லை. என்னுடைய மகளை பற்றி அவதூறாக பேசுகிறாயா? என கூறிய அவர், சந்தியாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. மருமகனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் சந்தியா மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் அந்த வாலிபர் எச்சரித்தபடி சென்றுள்ளார்.

வீட்டில் தம்பதி பிணம்

இதனால் காந்தி, உறவினர் 2 பேரை அழைத்துக் கொண்டு சந்தியாவின் வீட்டுக்கு இரவு 8.30 மணிக்கு சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். படுக்கையில் ஜான் ஐசக்கும் அசைவற்று கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் கணவன், மனைவி 2 பேரும் பிணமாக கிடந்தனர். ஜான் ஐசக் உடல் அருகே விஷமும், மதுபாட்டிலும் கிடந்தன. இதனால் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் ஜான் ஐசக்கின் முகத்தில் லேசான காயம் இருந்தது.

போலீஸ் விசாரணை

மேலும் இதுபற்றி காந்தி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் விசாரணை நடத்தினார்.

காரணம் என்ன?

இந்த தற்கொலை குறித்து போலீசார் கூறுகையில், "சந்தியா தனக்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறிய வாலிபர், சந்தியாவையும் மிரட்டியிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். எனவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில் தம்பதி தற்கொலை விவகாரத்தில் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

மேலும் இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story