பிரசவ அறுவை சிகிச்சையில் இளம்பெண் திடீர் சாவு
பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் திடீரென இறந்தார். இதையடுத்து கமுதி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி
பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் திடீரென இறந்தார். இதையடுத்து கமுதி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறைமாத கர்ப்பிணி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகள் நாகக்கனி(வயது 21). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன்குமார்(25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நாகக்கனியை கடந்த 5-ந் தேதி கமுதி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நாகக்கனிக்கு, தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நாகக்கனிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நாகக்கனி உயிரிழந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதையடுத்து நாகக்கனிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவ அறிக்கை வேண்டுமென அவரின் சகோதரி நாகஜோதி, தாயார் வள்ளி, கணவர் நிரஞ்சன்குமார் மற்றும் உறவினர்கள் கமுதி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தவறான அறுவை சிகிச்சையால் தான் நாகக்கனி இறந்ததாக கூறினர்.
தகவல் அறிந்து வந்த கமுதி போலீசார் ராமநாதபுரம் மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் அனுமதி கடிதம் பெற்று அதன் பின்னர் மருத்துவ அறிக்கை பெற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.