காதில் ப்ளூடூத் மறைத்து வைத்து தேர்வு எழுதிய வாலிபர் கைது


காதில் ப்ளூடூத் மறைத்து வைத்து தேர்வு எழுதிய வாலிபர் கைது
x

ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை காதில் புளூடூத்தை மறைத்து வைத்து எழுதிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

பொறியியல் பணிக்கான தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நடந்தது. காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் தேர்வு அறைக்கு செல்லும்போது வலது காதில் கட்டுடன் சென்றார்.

அறை கண்காணிப்பாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

காதில் ப்ளூடூத்

அதனால் அவரை தேர்வு எழுத அனுமதித்தார். தேர்வு எழுதியபோது அவர் யாருடனோ பேசும் சத்தம் கேட்டது. உடனே அவரை அறை கண்காணிப்பாளர் எழுப்பி காதில் இருந்த கட்டை பிரிக்க சொன்னார். கட்டைப் பிரித்து பார்த்த போது காதில் ப்ளூடூத் கருவி இருந்தது. அதன் மூலம் அவர் யாரிடமோ விடைகளை கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டு, அவரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர்.

கைது

இந்த சம்பவம் குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளர் சரளா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். நூதனமான முறையில் காதில் புளூடூத் மறைத்து வைத்து தேர்வு எழுதிய வாலிபர் அப்துல் பயாசை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் அவர் புளூடூத் மூலம் யாரிடம் விடைகளை கேட்டு எழுதினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story