கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிப்பூண்டி அடுத்த ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து பார்த்திபன் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நவனீதகிருஷ்ணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைபோல் புழல் புத்தகரம் சுபாஷ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (39). இவர் வெல்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லோகேஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆவடிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த தணிகாசலம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தணிகாசலம் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.