வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆலங்குடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

வாலிபர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மயிலாடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் என்கிற மதியழகன். இவர் தற்போது அரசடிப்பட்டி 4 ரோடு அருகே வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ், யுவராஜ் என 2 மகன்கள் உள்ளனர். பிரகாஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். யுவராஜ் (வயது 23) ஆலங்குடியில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் யுவராஜ் கடந்த 6-ந் தேதி இரவு கூழையான்காடு கிராமத்திற்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த சிலர் யுவராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த யுவராஜின் தந்தை உள்ளிட்ட சிலர் அப்பகுதிக்கு சென்றபோது யுவராஜை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து காயமடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து துரைராஜ் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் தனக்கு அவமானமாக உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்தால் தன்னை தாக்கிய நபர்கள் என்னை கொலை செய்து விடுவார்கள் என்று பயமாக உள்ளதாகவும், அதனால் என்னை வேறு எங்கேயாவது அழைத்து செல்லுங்கள் என்றும் கூறி வந்துள்ளார். இதையடுத்து யுவராஜை மருத்துவமனையில் இருந்து அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யுவராஜ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

வழக்கு

இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யுவராஜின் தந்தை துரைராஜ் தனது மகன் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கு கூழையன்காட்டை சேர்ந்த சிலர் தான் காரணம் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.


Next Story