வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தளவாபாளையம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 27). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனோஜ்குமார் கடந்த 4 ஆண்டுகளாக 2 கால்களிலும் தோல் வியாதி ஏற்பட்டு, அதனால் அரிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. 2 கால் பகுதியில் புண்ணாகி கரூர், பரமத்தி வேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
கடைசியாக குஜிலியம்பாறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தோலில் அரிப்பு அதிகம் ஏற்பட்டு வலி அதிகமாக இருந்துள்ளது.
தூக்கில் தொங்கினார்
இதன் மனமுடைந்த மனோஜ்குமார் அவரது தந்தை ரத்தனத்திடம் என்னால் வலி தாங்க முடியவில்லை செத்துவிடலாம் போல் உள்ளது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் மனோஜ்குமார் நேற்று அதிகாலை வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டார்.
பின்னர் அறையில் இருந்த மின் விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டுக் கொண்டார். அங்கு சென்ற ரத்தினம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
சாவு
இதையடுத்து மனோஜ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்து ரத்தினம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.