கம்பத்தில் செல்போன் கோபுரத்தில் தூக்குப்போட்டு stவாலிபர் தற்கொலை
கம்பத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
கம்பத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
வாலிபர் மாயம்
தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி சாலை தெருவை சேர்ந்தவர் அருண்ஜேசுதா (வயது 28). இவரது தந்தை ஜேம்ஸ்பிரபு, தாய் ஆரோக்கியராணி. இவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் அருண்ஜேசுதா, தனது உறவினரான அப்பகுதியை சேர்ந்த உமாராணி என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சட்டக்கல்லூரியில் சேர்ந்த அருண் ஜேசுதா, முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது படிப்பு வரவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பின்னர் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி அருண் ஜேசுதா வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை உமாராணி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் உமாராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண் ஜேசுதாவை தேடி வந்தனர்.
செல்போன் கோபுரத்தில் பிணம்
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை காமயகவுண்டன்பட்டி சாலை தெருவின் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுர பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, செல்போன் கோபுரத்தின் அடிப்பகுதி கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. உடனே இதுகுறித்து அவர்கள் கம்பம் வடக்கு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில், தூக்கில் தொங்கியவர், அருண்ஜேசுதா என்பது தெரியவந்ததும், தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
17-ந்தேதி அருண்ஜேசுதா மாயமான நிலையில், நேற்று அவர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் தூக்குப்போட்ட செல்போன் கோபுரத்தை சுற்றிலும் புதர்மண்டி காணப்பட்டது. இதனால் அங்கு அவரது உடல் கிடந்தது யாருக்கும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்ஜேசுதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.