காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
லாலாபேட்டையில் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
காவிரியில் குளித்தனர்
திண்டுக்கல் மாவட்டம், ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் விஷ்வா (வயது 24). இவர் பொறியியல் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியின் மகன் புருஷோத்தமன் (18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு இந்தாண்டு கல்லூரியில் சேர இருந்தார். மகஸே்வரியும், ரேவதியும் அக்கா, தங்கை ஆவார்.
இந்தநிலையில் நேற்று 2 குடும்பத்தினரும் கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கொம்பாடிப்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தர்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் லாலாபேட்டை காவிரி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர். அப்போது விஷ்வாவும், புருஷோத்தமனும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
பிணமாக மீட்பு
அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இதைக்கண்ட அவர்களது உறவினர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து லாலாபேட்டை போலீசாருக்கும், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி தீயணைப்பு படைவீரர்கள் புருஷோத்தமனையும், விஷ்வாவையும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு புருஷோத்தமன் பிணமாக மீட்கப்பட்டார்.
தேடும் பணி தீவிரம்
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விஷ்வாவை காவிரி ஆற்றில் தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி கும்பிட வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.