வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் வாலிபர் ஒருவர் தொங்கி கொண்டிருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்வையிட்டபோது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாலிபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி(வயது 30) என்பதும், இவர் மணப்பாறை பகுதியில் செயல்படும் ஒரு தனியார் நிறுவன நூற்பாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் திருமணமானவர் என்பதும், இவரது மனைக்கு 2 நாட்களுக்கு முன்புதான் வளைகாப்பு நடைபெற்றது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர் எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.