குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கோமதி நகரில் வசித்து வந்தவர் நெல்லி சிம்மாசனம் என்கிற சின்னா (வயது 30). இவர் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா (25). இவர்களது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம், தோட்டங்கி ஆகும். கடந்த 15-ந் தேதி மதியம் வீட்டில் இருந்த சின்னா சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்த போது சின்னாவுக்கும் அவரது மனைவி ஹேமலதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவி சிறிது நேரம் வெளியே சென்றார். பின்னர் குழந்தை அழும் சத்தம் கேட்டு ஹேமலதா வீட்டுக்குள் சென்றபோது வீட்டில் சின்னா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலறி துடித்தார். இதையடுத்து அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சின்னாவை கீழே இறக்கி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அலமேலு அம்மன் தெருவை சேர்ந்தவர் கரிமுல்லா (வயது 47). இவரது மனைவி பர்வினா (42) பர்வினாவுக்கு திடீரென உடலில் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு கடந்த 14-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பர்வினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த கரிமுல்லா 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக கரிமுல்லாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கரிமுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story