ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கொலை:குமாரபாளையம் கோர்ட்டில் 2 பேர் சரண்


ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கொலை:குமாரபாளையம் கோர்ட்டில் 2 பேர் சரண்
x

ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கொலை:செய்யப்பட்ட சம்பவத்தில் குமாரபாளையம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனா்

ஈரோடு

ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் குமாரபாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வாலிபர் கொலை

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 29). தொழிலாளி. இவருடைய மனைவி ஆசிம். சந்தோஷ் நேற்று முன்தினம் கனிராவுத்தர்குளம் காந்திநகர்ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அவர் மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது, சித்தோடு பகுதியை சேர்ந்த ஜின்னா (35) மற்றும் 4 பேர் அங்கு நின்றிருந்தனர். ஏற்கனவே சந்தோசுக்கும், ஜின்னாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இதனால் ஜின்னாவுக்கும், சந்தோசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறில் ஜின்னா உள்பட 5 பேரும் சேர்ந்து சந்தோஷை தாக்கினர். இதையடுத்து ஜின்னா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 தனிப்படைகள்

இந்த கொலை தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டா்கள் சண்முகம், சோமசுந்தரம், முருகன், தெய்வராணி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

2 பேர் சரண்

இதனிடையே சந்தோஷை கொலை செய்ததாக ஜின்னா, ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்களில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன்சத்திரம் போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணையின்போது சந்தோஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேர் யார்? உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.


Next Story