கேரள அரசு பஸ் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
செங்கோட்டையில் கேரள மாநில அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் கேரள மாநில அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
நண்பர்கள்
செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து மகன் ஹரிஹரன் (வயது 23). இவர் கேரளாவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான செங்கோட்டை-கொல்லம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவரை மோட்டார் சைக்கிள் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார்.
வாலிபர் பலி
செங்கோட்டை- கொல்லம் மெயின் ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே சென்றபோது, எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகின்றார்.