மது விருந்தில் வாலிபர் குத்திக் கொலை
திருப்பத்தூரில் நடந்த மதுவிருந்தில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். தனது எதிரியுடன் பேசியதால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூரில் நடந்த மதுவிருந்தில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். தனது எதிரியுடன் பேசியதால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
மது விருந்து
திருப்பத்தூர் டவுன் கவுதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விஜயபிரசாந்த் (வயது 21). அதேப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை மகன் முகேஷ்வரன் (20), மற்றும் அஜய்பாலா (21) மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். முகேஷ்வரனுக்கு 10 நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததை நண்பர்கள் 3 பேரும் கவுதம்பேட்டை அருகே உள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் கேக் வெட்டி, மது குடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது விஜயபிரசாந்துக்கு எதிரியான, மனோஜ் என்பவர் அந்த வழியாக சென்றுள்ளார்.
குத்திக் கொலை
அவனை முகேஷ்வரன் அழைத்து பேசி உள்ளார். இதனால் விஜயபிரசாந்துக்கும், முகேஷ்வரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அஜய்பாலா சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
வீட்டிற்கு சென்ற முகேஷ்வரன், ஆத்திரம் தீராமல் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துச்சென்று, விஜயபிரசாந்த் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதில் விஜயபிரசாந்த் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அங்கேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயபிரசாந்த்தின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் குவிப்பு
மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முகேஷ்வரனை தேடினர். அப்போது முகேஷ்வரன் அதேப் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுவிருந்தில், நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.