மதுபோதையில் வாலிபர் ரகளை செய்ததால் பரபரப்பு
ஓசூரில் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் வாலிபர் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூர் காமராஜ் காலனி பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்து வருபவர் சேகர் (வயது23). இவர் நேற்று மது அருந்திய நிலையில், ஓசூர் ராயக்கோட்டை சாலையில், ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். போதை அதிகமானதால் அவர், ஓட்டலில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்தினர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அங்கு சென்று சேகரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். பேண்ட் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் இருந்த அவர், போலீஸ் நிலையத்தில் கூச்சல் போட்டவாறு அங்குமிங்கும் நடமாடியவாறும், சுவற்றில் தலையை முட்டிக்கொண்டும் ரகளை செய்தார். அவரது இந்த செயல், போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தனக்கு சிகிச்சையளிக்குமாறு அவர் சத்தம் போட்டவாறு அங்குமிங்கும் ஓடினார். ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததால், டாக்டர்கள், நர்சுகள் சிகிச்சை அளிக்க தயங்கினர். பின்னர், அந்த வாலிபர் சிறிது தெளிவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி சென்றதாக தெரிகிறது. ஓட்டல், போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மதுபோதையில் நிலை கொள்ளாமல் அந்த வாலிபர் செய்த ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.