டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள் கைது
தைப்பூச விடுமுறை அன்று மது கேட்டு தகராறு செய்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34). இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தைப்பூசத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அன்று மாலை, வசந்தகுமார் தனது நண்பர்கள் தனபால், விக்னேஷ் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் குமாரிடம் மது பாட்டில் கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று கூறவே. அவர்கள் அங்கு கிடந்த பீர்பாட்டிலால் வசந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (23), ஆனந்தராஜ் (24), கிருஷ்ணமூர்த்தி (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜவேல் அஜித் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.