ஓடும் வேனில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்
விளாத்திகுளத்தில் ஓடும் வேனில் வாலிபர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
எட்டயபுரம்:
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்தும் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வீடியோ காட்சியில் பதிவான வேன் எண்ணை கொண்டு நடத்திய விசாரணையில், விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் இளவரசன் (வயது 27) என்பவருக்கு சொந்தமான வேன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வேனை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வேன் உரிமையாளர் இளவரசன் (27) மற்றும் பட்டாசுகள் வெடித்த ஜெயம் (25) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேனில் சென்ற சிறுவர்களையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.