நகை வாங்குவது போல் நடித்து 4 பவுன் நகை திருடிய வாலிபர்கள்


நகை வாங்குவது போல் நடித்து 4 பவுன் நகை திருடிய வாலிபர்கள்
x

ஒடுகத்தூரில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுன் நகையை திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர்

அணைக்கட்டு

ஒடுகத்தூரில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுன் நகையை திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நகை வாங்குவது போல் திருட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் விஷ்வா (வயதப 27). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரிமலை கிராமத்தைச் சேர்ந்த மரகதம் (25) என்ற பெண் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஒடுகத்தூர் கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றதால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது 2 பேர் விஷ்வாவின் நகைக் கடைக்கு சென்று நகை வாங்குவது போல் கடை ஊழியர்மரகதத்திடம் பேச்சுக் கொடுத்து விலை உயர்ந்த நகைகளை காண்பிக்கும்படி கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் நகைகளை ஒவ்வொன்றாக காண்பித்துள்ளார்.

கடையில் வேறு யாரும் இல்லாததை அறிந்த அந்த நபர்கள் திடீரென 4 பவுன் செயினை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

வாலிபருக்கு தர்ம அடி

இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் கடையின் வெளியே வந்து திருடன் திருடன் என கத்திக் கூச்சலிட்டார். உடனே அங்கிருந்தவர்கள், தப்பி ஓடிய 2 பேரையும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்றொருவர் நகையுடன் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், பிடிபட்ட நபரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த சாதிக் (32) என்பதும், தப்பி ஓடியவர் திருப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் (38) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஷ்வா வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்கை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.


Next Story