பற்கள் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன?


பற்கள் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன?
x

சுபாஷ்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில், போலீஸ் நிலையத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி பாதிக்கப்பட்டவரிடம் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கிடையே உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

4 பிரிவுகளில் வழக்கு

கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பல் பிடுங்கிய சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கி மகன் சுபாஷ் (வயது 25) என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நான் (சுபாஷ்), எனது நண்பர்களான கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோருக்கும், தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த மற்றொரு வெங்கடேஷ் என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்தது. இதுகுறித்து எங்கள் மீது கல்லிடைக்குறிச்சி போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் எங்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் எங்கள் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தார், என்று கூறி இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது இந்திய தண்டனை சட்டம் 323 (தானாக முன்வந்து எளிய காயத்தை ஏற்படுத்துதல்), 324 (கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்துதல்), 326 (கொடுங்காயங்களை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (1) (குற்றவியல் மிரட்டல்) என்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடந்தது என்ன?

இதற்கிடையே, சுபாஷூக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, நேற்று காலை 11.40 மணிக்கு சுபாஷ் தனது வக்கீலான நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜனுடன் ஆஜரானார். இவர்களிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு, இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, சுபாஷ் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி தகவல்

கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுபாஷ், அவரின் நண்பர்களான லட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோரின் உடைகளை போலீசார் அவிழ்க்க கூறியதாகவும், அப்போது அங்கு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கட்டிங் பிளேடை எடுத்து 3 பேரின் பற்களை பிடுங்கி லத்தியால் கொடூரமாகதாக்கியதாகவும் கூறியதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நரக வேதனையை அனுபவித்ததாக அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டாராம். சுபாஷ் கூறிய அத்தனை தகவல்களையும் போலீசார் எழுதி வாங்கி அவரிடம் கையொப்பம் பெற்று கொண்டனர். தொடர்ந்து விரைவில் சாட்சியங்களை விசாரிக்க உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு தெரிவித்தார்.

கொலை முயற்சி வழக்கு

விசாரணைக்கு பின்னர் வக்கீல் மகாராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று (அதாவது நேற்று) நடந்த விசாரணை எங்களுக்கு திருப்தியாக உள்ளது. விரைவில் சாட்சியங்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். நாளை (அதாவது இன்று) டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னையில் எழிலகத்தில் வைத்து 2 பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்து கொள்ள உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீது கொலை முயற்சி (இந்திய தண்டனை சட்டம் 307) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரணை ஆணையம் தடயங்களை அழிக்கவே அமைக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறோம். இந்த சம்பவத்தில் தவறு செய்த அனைத்து துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story