புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரவாசுதேவ பெருமாள்

தர்மபுரி நகரில் உள்ள கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதியமான்கோட்டை சென்றாய பெருமாள்

இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மிராய பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பழைய தர்மபுரியை அடுத்த வரதகுப்பத்தில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

தங்கக்கவசம்

இதேபோன்று மூக்கனூர் அக்கமணஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம்

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சாமி கோவிலில் அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் காரிமங்கலத்தை அடுத்த சஞ்சீவராயன் மலை கோவில், கோவிலூர் சென்னகேச பெருமாள் கோவில், மல்லி குட்டை திம்மராய சாமி கோவில், மோதூர் பெருமாள் கோவில், கெரகோடஅள்ளி, மணிக்கட்டியூர், பாலக்கோடு ரோடு ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


Next Story