ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி:
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேக விழா
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வருடத்தின் ஒரு முறை இந்த வழிபாட்டை செய்வதின் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்தநிலையில் ஐப்பசி மாத பவுர்ணமியான இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திரகிரகணம் என்பதால் கோவில்களில் நடைசாத்தப்படுகிறது. இதனால் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டது. விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னாபிஷேக அலங்காரத்தில் கவீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் காசிஸ்வர பசவேஸ்வர சிவகுமார சாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மனுக்கு கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் தேன்கனிக்கோட்டை பசவேச சாமி கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் போத்தாபுரம் கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியைமுன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. முன்னதாக சாமிக்கு பால் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 100 கிலோ அன்னத்தால் முத்தீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் போத்தாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவு தெருவில் உள்ள சோமேஸ்வரர் ஆலயம், பிருந்தாவனம் நகர் யோகீஸ்வரர் கோவில், கும்பாரத்தெருவில் உள்ள கும்பேஸ்வரர் கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசி ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவன் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், சூளகிரியில் உள்ள காசி ஈஸ்வரர் கோவில், அத்திமுகம் ஐராவதேஸ்வர சாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.