பூமிசமுத்திரத்தில் பூனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே பூமிசமுத்திரத்தில் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கணம் கட்டுதல் மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சுமங்கலி பூஜை மற்றும் விமானங்க்ளில் ஸ்தூபி பிரதிஷ்டை செய்தல், அஷ்டபந்தனம், கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, புண்ணிய வசனம், நாடி சந்தானம் தொடக்கம், பிரம்ம சுத்தி ரக்சன அணிவித்தல், மந்திர புஷ்பம், உபசாரம் மகாபூர்ணாகுதி, மகா தீபாராதனை, யாகத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மொரப்பூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் அர்ச்சகர் எம்.டி.விஜய் ஆனந்த ராம் ஐயங்கார் குழுவினர் கும்ப லக்கனத்தில் விமான கலசத்திற்கும், மூலவர் பூனாட்சியம்மன் மற்றும் கற்பக விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. விழாவில் பூமிசமுத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா என்.எம்.செல்லன், நாட்டு கவுண்டர் சி.தமிழரசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.