கார்த்திகை தீப திருவிழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு-வீடுகளில் பெண்கள் விளக்கேற்றினர்


கார்த்திகை தீப திருவிழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு-வீடுகளில் பெண்கள் விளக்கேற்றினர்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:30 AM IST (Updated: 7 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் பெண்கள் விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

கார்த்திகை தீபம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலை அந்தந்த கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தர்மபுரி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சுவாமி கோவில், பரவாசு தேவ பெருமாள் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பழனிவேல் சித்தர் கோவில்

கடத்தூர் அருகே தொங்கனூர் சங்கரலிங்கம் பித்தன் பழனிவேல் சித்தர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மகா தீபத்தை ஏற்றி வைத்தார். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நல்லம்பள்ளி அருகே நூலஅள்ளி வத்தல்மலையில் 2 ஆயிரத்து 500 அடி உயர மலை உச்சியில் மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story