தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ருத்ரா அபிஷேகம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார தினத்தன்று ருத்ரா அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ருத்ரா அபிஷேகம் நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றன. பின்னர் 118 சங்கு பூஜை மற்றும் பூர்த்தி ஹோமம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 11 வகையான தீர்த்தங்கள், வாசனை திரவியங்களை கொண்டு ஆனந்த நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் மோகன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜை செய்தனர்.
திருவாசகம் முற்றோதல்
இந்த சிறப்பு வழிபாட்டின் போது சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் சிவனடியார்களுக்கு அபிஷேக விபூதி மற்றும் ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருவாசக குழுவினர், சிவ பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.