ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

ஆங்கில புத்தாண்டையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்கக்கவசம் சாற்றுதலும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அபய ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

கோட்டை கோவில்

இதேபோல் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், ஓம் சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், குப்பா கவுண்டர் தெரு பூவாடைக்காரி அம்மன் கோவில், பாரதி புரம் விநாயகர் கோவில், ஹரிஹர நாதசாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவில், ஆத்துமேட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலபைரவர் கோவில்

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவில், கெரகோடஅள்ளி அஷ்ட வராகி அம்மன் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஞான பிள்ளையார் கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சாமி கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேய சாமி கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், காரிமங்கலம் சஞ்சீவிராயன் மலைக்கோவில், மந்தை வீதி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் மற்றும் மணிக்கட்டியூர், பாலக்கோடு ஏரிக்கரைகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் புத்தாண்டு பிறப்பையொட்டி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story