நல்லாகவுண்டனஅள்ளியில் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
தர்மபுரி அருகே சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லாகவுண்டனஅள்ளியில் உள்ள எல்லையம்மன் கோவில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கனம் கட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கோபுர கலசம் நிறுவுதலும், அம்மன் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையிலிருந்து புனித நீர் குடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் எல்லையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.